ஊராட்சி தலைவர்கள் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் பணியாளர்கள்: புகார் செய்தால் வேலை பறிபோகும்
ஊராட்சி தலைவர்கள் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் பணியாளர்கள்: புகார் செய்தால் வேலை பறிபோகும்
ADDED : ஜூலை 18, 2024 02:27 AM

சென்னை: உள்ளாட்சி அமைப்பில், மலேரியா தடுப்பு பணியாளர்களை, ஊராட்சி தலைவர்களின் வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
தமிழகத்தில் மலேரியா, டெங்கு உள்பட கொசுக்களால் பரவும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தினமும், 250 முதல் 400 ரூபாய் என்ற தினக்கூலி அடிப்படையில், இவர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், கொசு ஒழிப்பு பணிகளுடன், ஊராட்சி தலைவர்களின் வீடுகளில் தோட்டவேலை, துணி துவைத்தல், பாத்திரம் மற்றும் கழிப்பறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல வேலைகளை செய்ய வற்புறுத்துவதாக, அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மலேரியா தொழிலாளர்களுக்காக போராடும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது: மாநிலம் முழுதும், 38,000 கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக இவர்கள் நியமிக்கப்படுவதால், ஊராட்சி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் வீடுகளிலும் வேலையும் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். சம்பளம் தராத வேலையாட்களாக இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இதுகுறித்து புகார் கொடுத்தால், பணியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
எனவே, கொசு ஒழிப்பு பணியாளர்களை, பொது சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்; அவர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்குவதுடன், குறைந்தபட்சம் 21,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.