தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி: திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி: திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
UPDATED : ஜூன் 01, 2024 06:54 PM
ADDED : ஜூன் 01, 2024 07:34 AM

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில், 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி மூன்று நாள் தியானத்தை மே 30ம் தேதி இரவு துவக்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று அறைகளில் ஒன்று, பிரதமருக்கு 'ஏசி' வசதியுடன் தயார் செய்யப்பட்டது. தியானத்தில் பிரதமர் மவுன விரதமும் மேற்கொண்டார்.
3வது நாளான இன்று (ஜூன் 01) சூரிய நமஸ்காரம் செய்ய தியானத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடி வெளியே வந்தார். மேகமூட்டம் காரணமாக, சூரிய நமஸ்காரம் செய்யாமல், பிரதமர் மோடி மீண்டும் உள்ளே சென்று தியானத்தில் ஈடுபட்டார். மாலை3 மணியளவில் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கிளம்பி, படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலையின் வலது பாதத்தில் மலர் தூவியும், மாலையை வைத்தும் மரியாதை செலுத்தினார். பிறகு சிலையை சுற்றிப்பார்த்தார்.
இன்னும் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பும் பிரதமர், கரைக்கு சென்று விருந்தினர் மாளிகை செல்ல உள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டில்லி செல்ல உள்ளார்.