குட்கா கடத்தலை தடுப்பது சிரமம்: உணவு பாதுகாப்பு அதிகாரி ஆதங்கம்
குட்கா கடத்தலை தடுப்பது சிரமம்: உணவு பாதுகாப்பு அதிகாரி ஆதங்கம்
ADDED : ஜூலை 28, 2024 12:40 AM

சென்னை: “குட்கா போன்ற பொருட்களுக்கு, அண்டை மாநிலங்களில் தடையில்லாததால், தமிழகத்திற்கு கடத்தி வருவதை தடுக்க முடியவில்லை,” என உணவுப் பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் கூறினார்.
ஆந்திரா மாநிலம் தடா பகுதியில் இருந்து, தமிழகத்திற்கு லாரிகள் வாயிலாக, 26ம் தேதி குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டன.
கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில், 10,800 கிலோ பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர் விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நேற்று முன்தினம், 4,000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது:
இந்தியாவில், ஒரு சில மாநிலங்களில் தான், பான் மசாலாக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் பான் மசாலா பொருட்கள் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படுகின்றன. பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து பான் மசாலாக்களை எளிதாக கொள்முதல் செய்து, 4 அல்லது 5 மணி நேரத்திற்குள் சென்னைக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.
இவற்றை தடுப்பதில், பல்வேறு சிரமங்கள் உள்ளன. சாலையின் ஒருபுறம் பான் மசாலாவுக்கு தடை; மற்றொருபுறம் தடை இல்லை.
இதை வைத்து, எளிதாக ரயில், லாரிகள் வாயிலாக, தமிழகத்திற்கு கடத்தி வருகின்றனர். நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலும், அவர்கள் மீண்டும் மீண்டும் கடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.