காங்., ஆட்சியைப் பிடித்தது போல பேசுகிறார் ராகுல்: வானதி கிண்டல்
காங்., ஆட்சியைப் பிடித்தது போல பேசுகிறார் ராகுல்: வானதி கிண்டல்
ADDED : ஜூன் 07, 2024 08:16 PM
கோவை:'இண்டியா' கூட்டணி வென்று, காங்., ஆட்சியமைத்தது போல பேசிக் கொண்டிருக்கிறார் ராகுல். காங்., தோற்றுவிட்டது என, அவருக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது' என, பா.ஜ., -- எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கப் போகிறது. தொடர்ந்து மூன்று முறை பிரதமர் என்ற நேருவின் சாதனையை சமன் செய்திருக்கிறார் பிரதமர் மோடி.
பா.ஜ., மட்டும் தனித்து, 240 இடங்கள் பெற்றுள்ளது. 'இண்டியா' கூட்டணியில் காங்., உட்பட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து, 234 தொகுதிகளைப் பெற்றுள்ளன.
இதில், திரிணாமூல் காங்., 29, ஆம் ஆத்மி, 3, என, காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்ற 35 இடங்களைக் கழித்தால், 'இண்டியா' கூட்டணி 199 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
ஆனால், பா.ஜ., தலைமையிலான கூட்டணியை வென்று, தாங்கள் ஆட்சியமைத்து விட்டதைப் போல, காங்., மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்., பா.ஜ., பெற்றதில், பாதி இடங்களைக் கூடப் பெறவில்லை.
பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததை, கொண்டாட வேண்டிய பரிதாப நிலைக்கு 'இண்டியா' கூட்டணி தள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை யாரும் மாற்ற முடியாது.
காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு, யாராவது 'இண்டியா' கூட்டணி தோற்றுவிட்டது என்பதை எடுத்துச் சொன்னால் நல்லது. காங்., வெற்றி பெற்றுவிட்டதைப் போலவும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை கிண்டலடித்தும் பேசி வருகிறார்.
பா.ஜ.,வைப் பொருத்தவரை, இத்தேர்தல் வெற்றி கொண்டாடித் தீர்க்க வேண்டிய ஒன்று.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.