தேடி வரும் வருவாய் வாய்ப்புகளை திருப்பி விடும் தோட்டக்கலை துறை
தேடி வரும் வருவாய் வாய்ப்புகளை திருப்பி விடும் தோட்டக்கலை துறை
ADDED : ஜூலை 14, 2024 01:20 AM

சென்னை: தோட்டக்கலை துறையின், நிலம் எழிலுாட்டும்பிரிவு பெயரளவு இயங்கி வருவதால், அதன் வருவாய் தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தோட்டக்கலை துறை வாயிலாக, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வீடுகள் ஆகியவற்றில் அழகு செடிகள்,மரங்கள் மற்றும் பூச்செடிகளை அழகுப்படுத்தும் பணி மேற்கொள்ள, நிலம் எழிலுாட்டும் பிரிவு இயங்கி வருகிறது.
தனியார் நிறுவனங்களை காட்டிலும், தோட்டக்கலை துறையில் குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, தோட்டக்கலை துறைக்கு வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக, இந்தப் பிரிவை வலுப்படுத்துவதில், அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
இதனால், தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் என,இரண்டு பேருடன் மட்டுமே, இந்தப் பிரிவு இயங்கி வருகிறது.
தஞ்சாவூர் விமானப்படை தளத்தில், நிலம் எழிலுாட்டும் பணிக்கான வாய்ப்பு, கடந்தாண்டு தோட்டக்கலை துறைக்கு கிடைத்தது. இதன் வாயிலாக, 1.74 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துஉள்ளது. போதிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்படாததால், எழிலுாட்டும் பணி கேட்டு வரும் தனியார் மற்றும் பொது மக்கள்திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இதனால், தனியார் எழிலுாட்டும் நிறுவனங்களை நோக்கி, அவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், தோட்டக்கலை துறைக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தட்டிப் பறிக்கப்படுகிறது.
தோட்டக்கலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில், மாதவரம், பெரம்பூர், திருவான்மியூர், அண்ணா நகர் தோட்டக்கலை கிடங்குகளில், 20க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள், ஆண்டுக்கு 9 மாதங்கள் பணியின்றி உள்ளனர். நகரப்பகுதிகளின் வளர்ச்சியால், பல வட்டாரங்களில் பயிர்கள் சாகுபடி இல்லை. ஆனால், அங்குள்ள தோட்டக்கலை அலுவலகங்களில் பலர் பணிபுரிகின்றனர். இவர்களை, நிலம் எழிலுாட்டும் பிரிவில் சேர்த்து, துறையின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.