ADDED : பிப் 23, 2024 11:27 PM
சென்னை:சம வேலைக்கு சம ஊதியம் கோரி, ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட, இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேரை, போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில், 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, 5,200 ரூபாய்; அதற்கு முன் சேர்ந்தோருக்கு, 8,370 ரூபாய் அடிப்படை சம்பளம் தரப்படுகிறது.
இதனால், 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பள முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர், ஐந்தாவது நாளாக நேற்று, சென்னையில், பள்ளி கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 800 பெண்கள் உட்பட, 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில பொதுச்செயலர் ராபர்ட் கூறுகையில், ''எங்களின் ஒற்றை கோரிக்கையை நிறைவேறும்வரை, போராட்டத்தை கைவிட மாட்டோம்,'' என்றார்.