ADDED : ஜூன் 02, 2025 05:27 AM
சென்னை: தமிழகத்தில் புகையிலை பொருட்களை விற்ற 18,409 கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, காவல் துறை அறிக்கை:
மெல்லக்கூடிய குட்கா, பான்மசாலா, கூல் லிப் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிகரெட் மற்றும் பிற பொருட்களை சிறார்களுக்கும், கல்வி நிறுவனங்கள் அருகே விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை தடுக்க, காவல் துறை, உணவு பாதுகாப்பு மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை இணைந்து 2023ல் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதுவரை, 5.28 லட்சம் கடைகள் ஆய்வு செய்யப்பட்டன; உணவு பாதுகாப்பு துறையால், 1.78 லட்சம் கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விற்பனை செய்த கடைகளுக்கு 39.14 கோடி ரூபாய் அபராதம், 18,409 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசாரால் 43,167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4.11 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.