ADDED : ஜன 17, 2024 08:11 AM

திருப்பூர் :  கோவைக்கு சுற்றுலா சென்று மதுரை திரும்பி கொண்டிருந்தவர்களில், தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி, மூன்று பேர் பலியாகினர்.
மதுரை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த, 21 பேர், கோவை ஈஷா யோகா மையத்துக்கு சென்று விட்டு, நேற்று மாலை, தாராபுரம் வழியாக மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதுார் அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
முதலில், சின்னக்கருப்பு, 31,  பாக்கியராஜ், 39, பத்தாம் வகுப்பு படிக்கும் ஹரி, 16 ஆகியோர், ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.
ஆற்றில் தண்ணீர் அதிகளவில் இருந்துள்ளது. மூன்று பேருக்கும் நீச்சல் தெரியாததால், ஆற்றில் மூழ்கினர். உடன் வந்தவர்கள், அவர்களை காப்பாற்ற முற்பட்டனர்.
ஆனால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், காப்பாற்றும் முயற்சி கைகூடவில்லை. மூவரும் வெள்ளத்தில் சிக்கினர். தகவலறிந்து, தாராபுரம் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேர தேடுதலுக்கு பின், 3 பேரையும் சடலமாக மீட்டனர். தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

