ADDED : ஜூலை 02, 2025 01:36 AM
சென்னை:தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, சென்னை மட்டுமின்றி, பல்வேறு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இதில், 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல அடுக்குமாடி குடியிருப்புகள் பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தன.
இவற்றின் தரத்தை கண்டறிய வல்லுனர் குழு நியமிக்கப்பட்டது. இக்குழு பரிந்துரைப்படி, மறுகட்டுமான திட்டத்தின் கீழ், பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் குறித்து, தமிழக வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் அன்பரசன் நேற்று, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இயக்குநர் ஸ்ரேயா பி சிங், வீட்டுவசதி துறை இணை செயலர் சரயு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் அன்பரசன் கூறியதாவது:
சென்னை, திருநெல்வேலி, கரூர், மதுரை மாவட்டங்களில், 1,223 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 7,212 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமான பணிகளை முடித்து, இம்மாதம் முதல் டிசம்பர் மாத இறுதிக்குள், அனைத்து குடியிருப்புகளும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.