ADDED : ஜூலை 25, 2024 10:31 AM

சென்னை: சென்னை பெருநகர காவல் துறை பயன்பாட்டிற்கு, 74 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, 85 இரு சக்கர வாகனங்களை, முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கடந்த ஆண்டு காவல் துறை மானிய கோரிக்கையில், 'கழிவு செய்யப்பட்ட போலீஸ் வாகனங்களுக்கு பதிலாக, ரோந்து பணிகளை மேற்கொள்ள, 200 புதிய இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, 40 பஜாஜ் பல்சர் இரு சக்கர வாகனங்கள், 39.38 லட்சம் ரூபாய் செலவிலும், 45 டி.வி.எஸ்., 'ஜூபிடர்' இரு சக்கர வாகனங்கள், 34.69 லட்சம் ரூபாய் செலவிலும் வாங்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களை, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவை, ரோந்து பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளன.
நடப்பு நிதியாண்டில், தமிழக காவல் துறைக்கு, 46.75 கோடி ரூபாய் செலவில், 840 வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. இவற்றில் சென்னை காவல் துறைக்கு, 24 வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் தீரஜ்குமார், டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டனர்.