கோவில்பட்டியில் வேளாண்மை துறை அதிகாரியை தாக்கியதாக ஊழியர் மீது வழக்கு
கோவில்பட்டியில் வேளாண்மை துறை அதிகாரியை தாக்கியதாக ஊழியர் மீது வழக்கு
ADDED : பிப் 06, 2024 10:22 PM

கோவில்பட்டி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வேளாண்மை துறை துணை இயக்குனரை தாக்கியதாக தற்காலிக ஊழியர் மீது போலீஸார் வழக்கு பதிந்து அவரைத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி மையம் மற்றும் உழவர் நலம்) மனோரஞ்சிதம் (51). இவர் செவ்வாய்க்கிழமை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆய்வு பணிக்காக வந்திருந்த போது அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாராம். அப்போது வட்டார தொழில் நுட்ப மேலாளர் தனபாலன் (தற்காலிக ஊழியர்) வருகை பதிவேட்டில் கையெழுத்திடாத நிலையில் இருந்து வந்தது குறித்து துணை இயக்குனர் கேட்டாராம்.
அப்போது அங்கு இருந்த தனபாலனுக்கும் துணை இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனபாலன் துணை இயக்குனரை தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து அவரைத் தேடி வருகின்றனர்.