ஜெர்மனியில் அறிவியல் படிக்க ஆசை 'புட் டெலிவரி'க்கு இடையே பயிற்சி
ஜெர்மனியில் அறிவியல் படிக்க ஆசை 'புட் டெலிவரி'க்கு இடையே பயிற்சி
ADDED : பிப் 06, 2024 12:24 AM

பாலக்காடு:கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் 'புட் டெலிவரி' வேலையில் ஈடுபட்டுள்ள வாலிபர், தெருவிளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து படிக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா பகுதியை சேர்ந்த சிவதாசின் மகன் அகில், 18. பிளஸ் 2 முடித்த பின், ஜெர்மன் நாட்டில் உயர் கல்வி படிக்க விரும்பும் இவர், அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதற்காக, எர்ணாகுளத்தில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் ஜெர்மன் மொழி படிக்கிறார். மற்ற நேரத்தில் 'புட் டெலிவரி' வேலை செய்கிறார். இந்நிலையில், இவர் வேலையின் இடைவேளையில், தெருவிளக்கு வெளிச்சத்தில் படிக்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவை, ஒரே நாளில், 60 லட்சம் பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, அகில் கூறியதாவது:
ஜெர்மனியில் உள்ள பல்கலையில், அறிவியலில் முதுநிலை படிப்பு படிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்கு முதல் சவால் ஜெர்மன் மொழி படிப்பதாகும். அதற்க்காக, எர்ணாகுளத்தில் தங்கி, ஜெர்மன் மொழி படித்துக்கொண்டே, பகுதி நேரமாக, 'புட் டெலிவரி' வேலை பார்க்கிறேன்.
மதியம் வரை வகுப்பறை உள்ளது, மாலையில், 4:00 மணி முதல், 11:00 மணி வரை, 'புட் டெலிவரி' வேலை செய்கிறேன். நேற்று முன்தினம், இடப்பள்ளி- மஞ்சும்மல் சாலையில் உள்ள வீட்டிற்கு, உணவு டெலிவரி செய்த பின், அடுத்த ஆர்டர் கிடைக்கும் வரையான இடைவேளையில், தெருவிளக்கின் கீழ் அமர்ந்து படிப்பதை, நஸ்ரு என்பவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார். தற்போது, அந்த வீடியோ வைரலாகி உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.