ADDED : பிப் 24, 2024 02:21 AM
சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசியதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய முடியாமல் தவித்து வரும் பா.ம.க., - அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுடன் திரைமறைவில் பேச்சு நடத்தி வருகிறது.
இரட்டை இலக்கில் லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி, மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என பா.ஜ.,விடம் பா.ம.க., வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி தொடர்பாக வெளிப்படையாக பா.ம.க., எந்தப் பேச்சையும் இதுவரை நடத்தவில்லை.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோரின் கார்கள், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டு முன்பு நின்றன.
இதனால் அவர்கள் மூவரும் பழனிசாமியுடன் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாக தகவல் பரவியது. அதிலும் மயிலம் தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., சிவகுமார், அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு மிகவும் நெருக்கமானவர். எனவே, ராமதாசின் துாதர்களாக அவர்கள் மூவரும் வந்திருக்கலாம் என கூறப்பட்டது.

