2026ம் ஆண்டு பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்; வெளியானது புது அறிவிப்பு
2026ம் ஆண்டு பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்; வெளியானது புது அறிவிப்பு
UPDATED : ஜூலை 04, 2025 10:23 PM
ADDED : ஜூலை 04, 2025 10:15 PM

மதுரை: 2026ம் ஆண்டு பொங்கல் முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும் என எய்ம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான அனுமந்தராவ் தெரிவித்தார்.
மதுரை தோப்பூரில், 2024ம் ஆண்டு மார்ச்சில் எய்ம்ஸ் கட்டுமான பணி துவங்கியது. இருகட்டமாக, 2 லட்சத்து 18,927 ச.மீ., பரப்பளவில் மருத்துவமனை கட்டடங்கள், மருத்துவ கல்லுாரி, விடுதி கட்டடங்கள், ஆசிரியர்கள் குடியிருப்புகள், மாணவ, மாணவியருக்கான தனி விடுதிகள், உணவகம், விளையாட்டுக் கூடம் போன்ற கட்டுமானத்தை, 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட மதிப்பீடு 2021.51 கோடி ரூபாய். தற்போது, 50 சதவீத பணிகள் முடிந் து உள்ளன. சமீபத்தில்,மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கட்டடங்கள் அமைய உள்ள முப்பரிமாண மாதிரி வடிவமைப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், இன்று ( ஜூலை 04) மதுரை 'எய்ம்ஸ்' தலைவர் பிரசாந்த் லவானியா தலைமையில் ஆலோசனை கூட்டம், மதுரை தோப்பூர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன (எய்ம்ஸ்) வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதுரை 'எய்ம்ஸ்' நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்தராவ் கூறியதாவது:
எய்ம்ஸ் நான்காவது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று ராமநாதபுரத்தில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்போது தோப்பூரில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதனால், வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் தை பொங்கல் முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்.
2027ம் ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவு பெற்று செயல்பட தொடங்கும். மாதந்தோறும் கட்டடப் பணிகள் குறித்த புகைப்படங்களை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.