ADDED : பிப் 06, 2024 04:47 AM
சென்னை: 'சாலையோரம் கல்லை நட்டு துணி சுற்றி, பூஜைகள் செய்து, சிலை என்று கூறும் அளவுக்கு, நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவது மிகவும் துரதிருஷ்டவசமானது' என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனைதெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்துக்கு வெளியில் வைக்கப்பட்டிருக்கும் கல்லை அகற்ற, தாசில்தாருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, சக்திமுருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்க டேஷ் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சாலையோரத்தில் ஒரு கல்லை நட்டு, துணியை சுற்றி, பூஜை போன்ற சடங்குகளை செய்து, சிலை என்று கூறும் அளவுக்கு, நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன.
இதுபோன்ற மூடநம்பிக்கைகள், சமூகத்தில் தொடர்ந்து நிலவி வருவது மிகவும் துரதிருஷ்டவசமானது; பரிணாம வளர்ச்சியை, மக்கள் அடைந்ததாக தெரியவில்லை.
இப்பிரச்னை தொடர்பான வழக்கை விசாரிப்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல். எனவே, மனுதாரர் புகாரின் அடிப்படையில், சாலையில் நடப்பட்டிருக்கும் கல்லை ஒரு வாரத்தில், பல்லாவரம் சரக ஏ.எஸ்.பி., அகற்ற வேண்டும்.
இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டார்.