குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் சம்பளத்தில் ரூ.90 கோடி ஊழல்; அன்புமணி குற்றச்சாட்டு
குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் சம்பளத்தில் ரூ.90 கோடி ஊழல்; அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 07, 2025 05:00 AM

சென்னை: குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர் சம்பளத்தில், ஆண்டுதோறும் 90 கோடி ரூபாய் ஊழல் நடப்பதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில், 11,597 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு தொழிலாளிக்கும் குறைந்தபட்ச சம்பளம், 15,401 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால் ஒப்பந்ததாரர்கள், 7500 முதல் 9800 ரூபாய் வரை மட்டுமே வழங்குகின்றனர். இதனால் மாதம், 7.5 கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்கு, 90 கோடி ரூபாய் சுருட்டப்படுகிறது. தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய இத்தொகையை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் பகிர்ந்து கொள்கின்றனர்.
இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் கூட, இந்த ஊழலுக்கு முடிவு கட்டப்படவில்லை.
முந்தைய ஆட்சியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், முதல்வரே சுட்டிக்காட்டியும் கூட இந்த ஊழல் தடுக்கப்படவில்லை; ஊழலுக்கு காரணமானவர்களும் தண்டிக்கப்படவில்லை.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளம், வங்கிகள் வாயிலாக வரவு வைக்கப்பட வேண்டும் என்பது விதி. அவ்வாறு செய்தால் மோசடி அம்பலமாகி விடும் என்பதற்காக, ரொக்கமாக வழங்கப்படுகிறது. இதை அரசு வேடிக்கை பார்ப்பது, ஊழலுக்கு துணை போவதாகும்.
இந்த ஊழல் குறித்து நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.