சட்டப்பூர்வ அமைப்புகளில் உரிய இட ஒதுக்கீடு: ஐகோர்ட்
சட்டப்பூர்வ அமைப்புகளில் உரிய இட ஒதுக்கீடு: ஐகோர்ட்
ADDED : ஜூலை 02, 2025 01:38 AM
சென்னை:'பார் கவுன்சில் ஆப் இந்தியா, இந்திய பல் மருத்துவ கவுன்சில் போன்ற, சட்டப்பூர்வ அமைப்புகளில், தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பார் கவுன்சில் ஆப் இந்தியா, இந்திய பல் மருத்துவ கவுன்சில் போன்ற சட்டப்பூர்வ அமைப்புகளில், தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க கோரி, சென்னை தியாகராயநகரை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ்பாபு என்பவர், வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
வாழ்வில் ஒவ்வொரு துறையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற, மனுதாரர் தரப்பு வாதத்தில் நியாயம் உள்ளது.
அதனால் தான், பார்லிமென்டில் 2016ம் ஆண்டில் இயற்றப்பட்ட, மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம், 4 சதவீத இடஒதுக்கீடை வழங்குகிறது. இந்த சட்டத்தின் பிரிவு 32, 34, உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பதவிகளில், இட ஒதுக்கீடை வழங்குகிறது. பிரிவு 33 குறிப்பிட்ட வகை குறைபாடுகள் உள்ளவர்கள், நிறுவனங்களில் வகிக்கக்கூடிய பதவிகளை, அரசு அடையாளம் காண வேண்டும் எனக் கூறுகிறது.
எனவே, சட்டப்பூர்வ அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரியங்களில், மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதிகளாக நியமிக்க, தேவையான நடவடிக்கையை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை கமிஷனர் எடுக்க வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.