தாசில்தார் உட்பட மூவருக்கு வீரதீர செயலுக்கான விருது
தாசில்தார் உட்பட மூவருக்கு வீரதீர செயலுக்கான விருது
ADDED : ஜன 26, 2024 09:23 PM

வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், தாசில்தார் உள்ளிட்ட மூன்று பேருக்கு வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில், வீரதீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கு, அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. இதில், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, 9,000 ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
நேற்றைய விழாவில், துாத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அடுத்த சிங்கித்துறையை சேர்ந்த யாசர் அராபத்; திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் செல்வசிங்; துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார் ஆகியோருக்கு, அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
கடந்த டிசம்பர், ௧7, 18ம் தேதிகளில், அதிதீவிர கனமழையால், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது திருச்செந்துார் தாலுகா தண்ணீர் பந்தல் கிராமத்தில், 250 பேர் சிக்கித் தவித்தனர். உடன், மீனவர் யாசர் அராபத் தலைமையில், 16 மீனவர்கள் அங்கு சென்று, அவர்களை மீட்டனர். மேலும், உப்பளத்தில் தவித்த, 13 தொழிலாளர்களையும், இரண்டு மணி நேரம் போராடி மீட்டனர்
திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோவில் கீழத்தெருவைச் சேர்ந்த டேனியல் செல்வசிங், வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளில் வசித்தவர்களுக்கு, பால் பாக்கெட், ரொட்டி, மருந்துகள் போன்றவற்றை, தண்ணீரில்நீந்திச் சென்று வழங்கினார்
தாசில்தார் சிவக்குமார், தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ள, 14 கிராமங்களுக்கு இரவு சென்று, வெள்ளம் வரப்போகும் தகவலை தெரிவித்து, அவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார். அவரது நேரடி கண்காணிப்பில், 2,400 பேர் மீட்கப்பட்டனர். அவர்களை பாராட்டி, அண்ணா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
கோட்டை அமீர்
ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றும் ஒருவருக்கு, கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. பதக்கம் பெறுபவருக்கு, 25,000 ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சியை சேர்ந்த முகமது ஜூபேருக்கு, குடியரசு தின விழாவில், முதல்வரால் வழங்கப்பட்டது.
பதக்கம் பெற்ற முகமது ஜூபேர், 'ஆல்ட் நியூஸ்' என்ற பெயரில், இணையதளம் நடத்தி வருகிறார். கடந்த 2023 மார்ச்சில், தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவியது. அதில் இடம்பெற்ற சம்பவம் தமிழகத்தில் நடந்தது அல்ல என செய்தி வெளியிட்டு, வன்முறை நிகழாமல் இருக்க உதவினார். அவரை பாராட்டி, இந்த ஆண்டுக்கான, 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிக்கு...
மாநில அளவில், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து, அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிக்கு, 'சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது' வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருதை, சேலம் மாவட்டம் பூலாம்பட்டி கிராமம், சின்னப்பில்லுக்குறிச்சியை சேர்ந்த பாலமுருகனுக்கு, நேற்றுமுதல்வர் வழங்கினார்.

