ADDED : பிப் 25, 2024 01:17 AM
சென்னை:குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததாலும், விசாரணையை நீட்டிக்க அனுமதி வழங்கப்படாததாலும், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, நைஜீரியா நாட்டை சேர்ந்த கிராண்ட் விக்டர் இகேனா என்பவரிடம், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தியதில், அவரிடம் இருந்து போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச்சில் சம்பவம் நடந்தது.
இவரது ஜாமின் மனுவை, சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனு, நீதிபதி நிர்மல்குமார் முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பிரவீன்நாத், ''கைதாகி 180 நாட்கள் முடிந்தும், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், சட்டப்பூர்வ ஜாமின் பெற உரிமை உள்ளது,'' என்றார்.
மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவில், 'ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த தேதியில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை; புலன் விசாரணையை முடிக்க, அவகாசத்தை நீட்டித்து உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
'எனவே, சட்டப்பூர்வ ஜாமின் பெறும் உரிமையை மறுக்க முடியாது. எனவே, மனுதாரருக்கு நிபந்தனைகள் அடிப்படையில் ஜாமின் வழங்கப்படுகிறது' என்று கூறியுள்ளார்.