கள்ளச்சாராயம் சம்பவத்தில் பா.ஜ., அ.தி.மு.க.,வுக்கு தொடர்பு: தி.மு.க., குற்றச்சாட்டு
கள்ளச்சாராயம் சம்பவத்தில் பா.ஜ., அ.தி.மு.க.,வுக்கு தொடர்பு: தி.மு.க., குற்றச்சாட்டு
UPDATED : ஜூன் 24, 2024 02:17 PM
ADDED : ஜூன் 24, 2024 01:46 PM

சென்னை: 'கள்ளச்சாராயம் சம்பவத்தில் பா.ஜ., அ.தி.மு.க.,வுக்கு தொடர்பு உள்ளது' என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் அரசு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக போராட வேண்டாம். கள்ளக்குறிச்சி சம்பவம் யாரும் எதிர்பாராத ஒன்று, வருத்தப்பட வேண்டிய ஒன்று என முதல்வர் ஏற்கனவே கூறியுள்ளார். கள்ளச்சாராயம் சம்பவத்தில் பா.ஜ., அ.தி.மு.க.,வுக்கு தொடர்பு உள்ளது.
அரசியல் ஆதாயம்
கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக., மற்றும் பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் பற்றிய உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. சட்டசபையில் விவாதிக்கலாம் என முதல்வர் கூறியிருக்கிறார்; ஆனால் அதிமுக.,வினர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இ.பி.எஸ் விவாதிக்க தயாராக இல்லை; நாடகமாடுகிறார். முழு உண்மை தெரியவரும் முன்பே அரசியல் ஆதாயத்திற்காக அதிமுக, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்துகின்றனர்.
உண்மை வெளியே வரும்
கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது, சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது; உண்மைகள் வெளியே வரும். எம்ஜிஆர் ஆட்சி காலத்திலேயே கள்ளச்சாராய விற்பனை இருந்தது. மதுவிலக்கு அமலில் இருந்ததால் தமிழகத்தில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்து ஆய்வு செய்தே மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. கள்ளச்சாராயத்தின் வரலாறை பற்றி தெரிந்து கொண்டு நிர்மலா சீதாராமன் பேச வேண்டும்.
சிபிஐ விசாரணை
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தை திசைத் திருப்பவே சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கேட்கின்றனர். 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றதை பொறுக்க முடியாதவர்கள் இவ்விவகாரத்தை பூதாகாரமாக்குகின்றனர். கள்ளச்சாராய மரணத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் இபிஎஸ், நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரியது ஏன்? தமக்கு எதிரான வழக்கில் முன்பு சிபிஐ மீது நம்பிக்கையில்லாத இபிஎஸ்.,க்கு இப்போது சிபிஐ மீது இப்போது நம்பிக்கை வந்தது எப்படி?
பா.ஜ., ஆளும் உ.பி., குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டது. அப்போது பா.ஜ.,வினர் ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை? காவல்துறை அமைச்சராக இருந்த இ.பி.எஸ்., தமிழக போலீஸை இழிவுப்படுத்துகிறார். விக்கிரவாண்டி தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி விவகாரத்தை அதிமுக, பா.ஜ.,வினர் பெரிதுப்படுத்துகின்றனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டும் என சொல்வது மனசாட்சி அற்ற செயல். இவ்வாறு அவர் கூறினார்.