மதுரையில் 'தினமலர்' ஆசிரியர், வெளியீட்டாளர் மீது வழக்கு
மதுரையில் 'தினமலர்' ஆசிரியர், வெளியீட்டாளர் மீது வழக்கு
ADDED : ஜன 26, 2024 01:50 AM
மதுரை:மதுரையில், 'தினமலர்' நாளிதழ் ஆசிரியர், வெளியீட்டாளர் மீது, நான்கு பிரிவுகளில் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரி கொடுத்த புகாரின்படி, எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
உ.பி., மாநிலம், அயோத்தியில் ஜன., 22ல், ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி தினமலர் நாளிதழில், செய்தி ஒன்று வெளியானது.
அதில், அயோத்தி விழாவை முன்னிட்டு தமிழகத்திலுள்ள ஹிந்து கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்த அனுமதி இல்லை என, தமிழக அரசு வாய்மொழி உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
'இச்செய்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதோடு, கலகத்தை துாண்டும் வகையில் உள்ளதாக செய்தி வெளியிட்ட நாளிதழ் நிர்வாகம் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மதுரை மதன கோபாலசுவாமி கோவில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, கலகத்தை துாண்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ், மதுரை தினமலர் நாளிதழ் ஆசிரியர், வெளியீட்டாளர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் மீது வழக்கு தொடர்ந்த அரசைக் கண்டித்து, பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்வது ஊடகங்களின் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட. அனைத்து ஊடகங்களும் தங்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று, தி.மு.க., எதிர்பார்ப்பது வேடிக்கை.
'அடக்குமுறையை கையாளும் தி.மு.க., அரசு, பொது மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து கொண்டிருக்கிறது. ஊடக சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் தி.மு.க., அரசின் இதுபோன்ற அராஜகங்கள், நீண்ட நாட்களுக்கு செல்லுபடியாகாது' எனக் கூறியுள்ளார்.
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் உட்பட பலரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

