முதல்வர் மருந்தகங்கள்: அதிக கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு
முதல்வர் மருந்தகங்கள்: அதிக கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : மார் 19, 2025 04:49 AM

சென்னை: மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்கு, 1,000 முதல்வர் மருந்தகங்களை தமிழக அரசு துவக்கிஉள்ளது. இந்த மருந்தகங்களை, கூட்டுறவு சங்கங்களும், தனியார் தொழில்முனைவோரும் நடத்துகின்றனர். முதல்வர் மருந்தக திட்டத்தை, கூட்டுறவு துறை நிர்வகிக்கிறது.
இந்நிலையில், முதல்வர் மருந்தகங்கள், போதிய மருந்துகள் சப்ளையின்றி முடங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடு தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலர் முருகானந்தம் நேற்று மாலை கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இதில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, இணைப் பதிவாளர் ஒருவர் கூறுகையில், 'முதல்வர் மருந்தகங்களில், அனைத்து வகை மருந்துகளும், எப்போதும் கிடைக்கும் வகையில் இருப்பில் வைக்குமாறும்; இந்த பணியில் அலட்சியம் காட்டாமல், அதிக கவனம் செலுத்துமாறும் உயரதிகாரிகள் எச்சரித்தனர்' என்றார்.