தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள்: ஸ்டாலின் பேச்சு
தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள்: ஸ்டாலின் பேச்சு
ADDED : ஜூன் 21, 2025 08:44 PM

சென்னை:எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்கக் கூடாது என நினைப்பவர்கள் தான் தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள் என்று மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அய்யன் வள்ளுவர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்து வைத்தார்.
அதனை தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது:
எல்லோரும் முன்னேறுவது சிலருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்கக் கூடாது என நினைப்பவர்கள் தான் தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள்.
பாராட்டுக்காக, இங்கு வரவில்லை. அன்புக்காக வந்துள்ளேன்.
கவனிப்பார் இல்லாமல் இருந்த வள்ளுவர் கோட்டத்தை புதுப்பொலிவுடன் மீட்டெடுத்துள்ளோம்.
சென்னையின் மையத்தில் 1,400 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அய்யன் வள்ளுவன் என்ற இந்த அரங்கத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அரசியலுக்காக, தேர்தலுக்காக செய்யவில்லை. உள்ளார்ந்து செய்கிறேன்.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயிலும் சிறு மலர் பள்ளி குழந்தைகளின் வாழ்த்தை, புன்னகையாகப் பெறும்போது தான் அந்த நாளே எனக்கு முழுமையடையும், இன்று நேற்று அல்ல, 42 ஆண்டுகளாக.
நான் உங்களில் ஒருவன். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.