கோவை ஏர்போர்ட்டில் மீண்டும் ஒரு சம்பவம்; துப்பாக்கித் தோட்டாவை ஷூவில் மறைத்த பயணி
கோவை ஏர்போர்ட்டில் மீண்டும் ஒரு சம்பவம்; துப்பாக்கித் தோட்டாவை ஷூவில் மறைத்த பயணி
ADDED : ஜூன் 15, 2025 07:45 PM

கோவை: கோவை விமான நிலையத்தில் கேரள பயணியிடம் இருந்து துப்பாக்கித் தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:
கோவை விமான நிலையத்திற்கு கேரள மாநிலம் கொச்சினைச் சேர்ந்த ஷிபு மேத்யூ என்பவர் வந்திருந்தார். இவர் அபுதாபி செல்ல இருந்தார்.
அவரின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படை பிரிவினர் சோதனையிட்டனர். அப்போது ஷிபு அணிந்திருந்த ஷூவையும் சோதனைக்கு உட்படுத்தினர். சோதனையில் அதனுள் துப்பாக்கித் தோட்டா பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக அவரை தனிமைப்படுத்தி விசாரணையை தொடர்ந்த அதிகாரிகள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஷிபு மேத்யூவிடம் விசாரணை நடத்தினர்.
தோட்டாவை மறைத்து கொண்டு வந்ததன் நோக்கம் என்ன என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.
ஏற்கனவே கோவை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரிடம் இருந்து 9 எம்எம் ரக தோட்டா கைப்பற்றப்பட்ட நிலையில் மீண்டும் அதே போல ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.