ADDED : ஜன 28, 2024 01:15 AM

சென்னை: பிரதமரின் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் கடந்த ஆண்டில், 19 கி.மீ., சாலை அமைத்ததற்கு, தென்னை நார் கயிறு வலை பயன்படுத்தப்பட்டு உள்ளது.
தேங்காய் மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் தென்னை நாரில் இருந்து தரை விரிப்பு, மிதியடி உட்பட, பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளது.
தமிழகத்தில் இருந்து தென்னை நார் தான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க, மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தென்னை நாரில் இருந்து, 'ஜியோ டெக்ஸ்டைல்ஸ்' எனப்படும், தென்னை நார் வலை தயாரிக்கப்படுகிறது. இது, மண் அரிப்பை தடுக்க, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளில் பதிக்கப்படுகிறது.
மத்திய அரசு, பிரதம மந்திரி ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் களிமண் சாலைகளில், தென்னை நார் வலையை பயன்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 369 கி.மீ., சாலைகளில், தென்னை நார் வலை பயன்படுத்த அனுமதித்துள்ளது.
கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில்; துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம்; திருப்பூர் குண்டடம்; தர்மபுரி பென்னாகரத்தில், 19 கி.மீ., துாரத்திற்கு தென்னை நார் வலை பதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழக அரசு, தென்னை நார் தொழில் துறையை ஊக்குவிக்க, கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை துவக்கி, தொழில்முனைவோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
சாலை அமைப்பதற்கு முன், தென்னை நார் வலை அமைக்கப்படும். அதன் மேல் மணல் போட்டு சாலை அமைக்கப்படும். இந்த வலை, சாலைகளின் கீழ் மண்ணின் வலிமையை மேம்படுத்தவும், பக்க சரிவுகளை நிலைபடுத்தவும் பயன்படுகிறது. மண் அரிப்பை தடுப்பதுடன், பக்க சாய்வுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்.
அரசு திட்டங்களில், தென்னை நார் வலை பயன்பாடானது, தென்னை நார் கயிறு மற்றும் தென்னை நார் கயிறு வலை உற்பத்தியாளர்களுக்கான சந்தைப்படுத்துதலை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

