தலைமறைவாக உள்ள பஞ்சாயத்து தலைவி பதவி நீக்கம் செய்ய கலெக்டருக்கு உத்தரவு
தலைமறைவாக உள்ள பஞ்சாயத்து தலைவி பதவி நீக்கம் செய்ய கலெக்டருக்கு உத்தரவு
ADDED : ஜன 26, 2024 02:02 AM
சென்னை:போலி சான்றிதழ் தயாரித்து, நிலம் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக உள்ள பஞ்சாயத்து தலைவியை, பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, திருவாரூர் கலெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைச் சேர்ந்த ரோஸ்லின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'என் மாமியார் இறந்து விட்டதாக, போலி சான்றிதழ் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து, 20 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை மோசடியாக அபகரித்துள்ளனர்.
'இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.
இதையடுத்து வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. சேரன்குளம் பஞ்சாயத்து தலைவி அமுதா உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாயத்து தலைவி அமுதாவை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என, அவமதிப்பு வழக்கை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்து பிறப்பித்த உத்தரவு:
ஆள்மாறாட்டம், நில அபகரிப்பு குற்றங்களில், ஒரு பஞ்சாயத்து தலைவிக்கு தொடர்பு இருப்பது என்பது துரதிருஷ்டவசமானது. இரண்டு வாரங்களில் சரண் அடைய, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், அதை பின்பற்றவில்லை. தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
பஞ்சாயத்து தலைவி பொறுப்பு வகிப்பவருக்கு, இது அழகல்ல. தலைமறைவாக தலைவி இருப்பதால், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து, கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
எனவே, தலைவர் பதவியில் இருந்து நீக்க, உரிய நடைமுறையை பின்பற்றி உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, திருவாரூர் கலெக்டருக்கு உத்தரவிடப்படுகிறது.
அமுதாவை பிடிக்க, தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருவர் எந்த உயர் பதவியில் இருந்தாலும், கடைசியில், சட்டத்தின் ஆட்சி தான் நிலைக்கும்.
பஞ்சாயத்து தலைவியின் செயலை பார்க்கும் போது, விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டார் என்பது தெரிகிறது. அதனால், வழக்கு விசாரணை முடியும் வரை, நீதிமன்ற காவலில் இருக்கும் வகையில் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை, பிப்ரவரி 12க்கு தள்ளி வைத்துள்ளார்.

