வழிகாட்டி மதிப்பு கணக்கில் தௌிவில்லை பத்திரப்பதிவு செய்வதில் குழப்பம்
வழிகாட்டி மதிப்பு கணக்கில் தௌிவில்லை பத்திரப்பதிவு செய்வதில் குழப்பம்
ADDED : ஜன 11, 2024 02:03 AM
சென்னை:வழிகாட்டி மதிப்பு உயர்வு தொடர்பான சுற்றறிக்கையை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் எதன் அடிப்படையில் பத்திரப் பதிவு மேற்கொள்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2022ல் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில் நில வழிகாட்டி மதிப்புகளை தற்போதைய சூழலுக்கு ஏற்றபடி கடைபிடிக்கலாம் என பதிவுத் துறை கூறியது.
இதனால் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல இடங்களில் 50 சதவீதம் வரை மதிப்புகள் உயர்ந்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பதிவுத் துறை சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் 2022 ஏப்ரலுக்கு முந்தைய மதிப்புகள் மீண்டும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பதிவுத்துறை அதிகாரிகள் மவுனமாக இருப்பதால் அத்துறை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பதிவுத் துறை அதிகாரி கூறுகையில் 'உயர் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் சார் பதிவாளர்களுக்கு என்ன அறிவுறுத்தல் வழங்குவது என்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம். இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் ஆலோசனை நடந்து வருகிறது' என்றார்.
பாதிப்பு
இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி ராமபிரபு கூறியதாவது:
கடந்த 2022 ஏப்ரலில் பதிவுத் துறை வழிகாட்டி மதிப்பு மாற்றம் தொடர்பாக பிறப்பித்த சுற்றறிக்கை ரத்தாகி விட்டது.
இந்த சுற்றறிக்கை அடிப்படையில் 2012ல் நிர்ணயிக்கப்பட்ட மதிப்புகளின்படி பத்திரப் பதிவு மேற்கொள்ளக் கூடாது.
அதனால் பத்திரங்களை பதிவு செய்ய சார் பதிவாளர்கள் தயங்குகின்றனர். பொது மக்களும் எந்த மதிப்பு அடிப்படையில் கிரைய பத்திரங்களை தயார் செய்வது என்பது தெரியாமல் தவிக்கின்றனர்.
மக்கள் குழப்பத்தை பதிவுத் துறை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

