தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு; திருப்பரங்குன்றம் வழக்கை டிச.,9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை
தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு; திருப்பரங்குன்றம் வழக்கை டிச.,9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை
UPDATED : டிச 05, 2025 12:26 PM
ADDED : டிச 05, 2025 10:58 AM

நமது சிறப்பு நிருபர்
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை, டிச.,9க்கு ஒத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும், அமல்படுத்தாமல் தி.மு.க., அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
அரசு கோரிக்கை
இந்த வழக்கு விசாரணை இன்று (டிச.,05) காலை 10.45 மணிக்கு மீண்டும் ஐகோர்ட் மதுரைக்கிளையில் நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
உத்தரவு
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுவாமி நாதன் வழக்கு விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இன்னொரு வழக்கும் ஒத்தி வைப்பு
இந்நிலையில், தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மாவட்ட கலெக்டர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கை டிச.,12க்கு ஒத்தி வைக்க கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை டிச.,12க்கு ஒத்தி வைத்தனர். அனைத்து வழக்கையும் விசாரித்து ஒரே தீர்ப்பாக வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். முன்னதாக தங்கள் தரப்பை கேட்க வேண்டும் என்று அரசு தரப்பு முன் வைத்த கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

