எதிர்கால வளர்ச்சிக்கு கைகொடுக்கும்! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு
எதிர்கால வளர்ச்சிக்கு கைகொடுக்கும்! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு
ADDED : பிப் 02, 2024 12:20 AM

திருப்பூர்:''நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது,'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில், ஜவுளித்துறை சார்ந்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளித்தாலும், லோக்சபா தேர்தல் முடிந்து, புதிய அரசால் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், ஜவுளித் துறைக்கான அறிவிப்பு இடம் பெறும் என்று, ஜவுளித்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் .
''அதிக இளைஞர் சக்தியை கொண்ட இந்தியாவில், தொழில் முனைவு மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக, 1 லட்சம் கோடி ரூபாய், 'கார்பஸ்' நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, ஜவுளித்துறையிலும் பல்வேறு புதிய நுட்பங்களையும், இயந்திரங்களையும் உருவாக்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்,'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வலுவான இந்தியாவை கட்டமைக்கும் நோக்கில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டியிடும் திறனை மேம்படுத்தவும், எதிர்கால திட்டமிடுதலுக்கு பட்ஜெட் கைகொடுக்கும்.
- சக்திவேல், தென்மண்டல பொறுப்பாளர், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்

