ADDED : ஜன 06, 2024 09:30 PM
சென்னை:எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான, 'டான்செட்' நுழைவு தேர்வு, மார்ச், 9ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அண்ணா பல்கலை கல்லுாரிகள், அதன் இணைப்பு கல்லுாரிகள், தமிழக அரசின் பிற பல்கலைகளில் இணைப்பு பெற்ற, கலை அறிவியல் கல்லுாரிகள் ஆகியவற்றில், குறிப்பிட்ட முதுநிலை படிப்புகளில் சேர, தமிழக அரசின் சார்பில், பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நுழைவு தேர்வு, டான்செட் என்ற பெயரில், அண்ணா பல்கலை வழியே நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான டான்செட் தேர்வு, மார்ச், 9ல் நடத்தப்படும் என, அண்ணா பல்கலை நேற்று அறிவித்துள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, https://tancet.annauniv.edu/tancet வரும், 10ம் தேதி துவங்குகிறது. பிப்.,7 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட உள்ளன.
எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான்., - எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., ஆகிய படிப்புகளில் சேர உள்ள பட்டதாரிகள், இந்த நுழைவு தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

