ஆடு மேய்க்கும் தொழிலாளி மகள் 'கேட்' தேர்வில் சாதித்து அசத்தல்
ஆடு மேய்க்கும் தொழிலாளி மகள் 'கேட்' தேர்வில் சாதித்து அசத்தல்
ADDED : ஜூன் 15, 2025 08:13 AM

திருச்சி: தொட்டியம் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளியின் மகள், 'கேட்' தேர்வில் தேசிய அளவில், 105வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட அய்யம்பாளையம் கிராமத்தில், ஆடு மேய்க்கும் விவசாய கூலி தொழிலாளி நீலிவனத்தான். இவரது மனைவி அமிர்தவல்லி. தம்பதியின் மூன்று பெண் குழந்தைகளில், இரண்டாவது மகளான விஜி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தார்.
கடந்த 2021ல் பிளஸ் 2 தேர்ச்சிக்கு பின், 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், தொட்டியம் கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லுாரியில் சீட் கிடைத்ததால், வேளாண் பொறியியல் துறையில் இளநிலை பயின்றார். இதில் தேர்ச்சி பெற்ற விஜி, முதுநிலை படிப்புக்காக, இந்த ஆண்டு நடந்த கேட் தேர்வு எழுதினார்.
அதில், இந்திய அளவிலான தர வரிசையில், 105வது இடத்தை பிடித்தார். தொட்டியம் கொங்கு நாடு இன்ஜினியரிங் கல்லுாரி தலைவர் பெரியசாமி மற்றும் பேராசிரியர்கள் மாணவி விஜியை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, மேற்கு வங்கம், கரக்பூர் ஐ.ஐ.டி.,யில் நிலம் மற்றும் நீர் ஆதாரங்கள் பொறியியல் துறையில் முதுநிலை பொறியியல் படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளார்.
கூலி தொழிலாளியாக இருந்தாலும், தன் மகளின் சாதனைக்காக உறுதுணையாக இருந்த நீலிவனத்தானை பாராட்ட விரும்பினால், 97866 84702 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.