ADDED : ஜூன் 24, 2025 11:53 PM
சென்னை:உலகளாவிய தாவூதி போராக் முஸ்லிம் சமூகத்தின், 53வது தலைவர் புனித சையத்னா முபாதல் சைபுதீன் சென்னை வருகை தந்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து நேற்று முன்தினம் ரயிலில் சென்னை வந்த அவரை, பெரம்பூர் ரயில் நிலையத்தில், தாவூதி போராக் முஸ்லிம் சமூகத்தின் மூத்த உறுப்பினர்களும், தமிழக அரசு அதிகாரிகளும் வரவேற்றனர்.
மொஹரம் மாதத்தின், 2 முதல் 10ம் தேதி வரை, சென்னையில் ஆண்டுதோறும் நடக்கும் 'ஆஷாரா முபாரகா' எனப்படும் மொஹரம் சபையில் பங்கேற்க அவர் சென்னை வந்துள்ளார்.
சென்னை பாரிமுனை, மூர் தெருவில் உள்ள தாவூதி போராக் முஸ்லிம் சமூக மசூதியில் நாளை காலை 10:00 முதல், பகல் 1:00 மணி வரை நடக்கும் மொஹரம் சபையில், புனித சையத்னா முபாதல் சைபுதீன் பங்கேற்கிறார். இதில் 12,000 பேர் பங்கேற்க உள்ளனர்.
நாளை துவங்கும் இந்த நிகழ்ச்சி ஒன்பது நாட்கள் நடக்க உள்ளது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி தினமும், பாரிமுனை ஆர்மேனியன் தெருவில் உள்ள பின்னி திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானம், கீழ்ப்பாக்கம் விங்ஸ் கன்வென்ஷன் சென்டர், ராயபுரம் செட்டி தோட்டம், புர்ஹானி மசூதி உட்பட ஒன்பது இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்நிகழ்வுகளில், 3,000 பேர் பங்கேற்க இருப்பதாக, தமிழக தாவூதி போராக் முஸ்லிம் சமூக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.