ADDED : ஜன 26, 2024 01:52 AM

சென்னை:பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமையாளரான பவதாரிணி, 47, உடல்நலக்குறைவால் இலங்கையில் காலமானார்.
இளையராஜாவின் மகளான பவதாரிணி, 'ராசய்யா' படம் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். 'பாரதி' படத்தில் இடம் பெற்ற, 'மயில் போல பொண்ணு ஒன்னு…' என்ற பாடல் மூலம், சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றார்.
பாடகராக மட்டுமின்றி, 'மாயநதி' உள்ளிட்ட சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றிஉள்ளார்.
கல்லீரல் புற்றுநோய் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த இவர், சமீபத்தில் ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றுள்ளார். மேலும் இலங்கையில் இளையராஜாவின் இசை கச்சேரியும், 27ம் தேதி நடக்க உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை, 5:30 மணியளவில், சிகிச்சை பலனின்றி பவதாரிணி காலமானார். இன்று மாலை பவதாரிணி உடல், சென்னை கொண்டு வரப்பட உள்ளது.
பவதாரிணியின் மறைவு திரையுலகில் மட்டுமின்றி, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

