தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலம் வடலுாரில் பக்தர்கள் குவிந்தனர்
தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலம் வடலுாரில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED : ஜன 26, 2024 02:48 AM

வடலூர்:வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் நேற்று நடந்த தைப்பூச ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 153ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு தர்ம சாலை சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டுடன் சத்திய ஞானசபையில் கொடியேற்றப்பட்டது.
வள்ளலார் அவதரித்த மருதுார், தண்ணீரில் விளக்கு எரியச் செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் கொடியேற்றப்பட்டது. நேற்று ஜோதி தரிசன பெருவிழா கோலாலகமாக நடந்தது. காலை 6:00 மணிக்கு சத்திய ஞான சபையில் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, வெண்மை, பொன்மை, கலப்பு ஆகிய ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. காலை 10:00, நண்பகல் 1:00, இரவு 7:00, 10:00 மணிக்கு தரிசனம் காண்பிக்கப்பட்டது. வடலுாரில் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஜன.,26) காலை 5:30 மணியளவில் ஜோதி காண்பிக்கப்படுகிறது.
ஜோதி தரிசனத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதலே ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் வடலூரில் குவிந்தனர். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஜோதி தரிசனம் காண வந்தனர்.
வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் அருண் தம்புராஜ், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சம்பத், மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார், வடலூர் சேர்மன் சிவக்குமார், தி.மு.க., நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டனர். எஸ்.பி., ராஜாராம் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நாளை (ஜன.27) வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம், சித்தி வளாக திருமாளிகையில் திருஅறை தரிசனம், பகல் 12:00 முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

