சீமான் மீது டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு; விசாரணைக்கு ஐகோர்ட் தடை
சீமான் மீது டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு; விசாரணைக்கு ஐகோர்ட் தடை
ADDED : ஜூலை 02, 2025 01:44 PM

மதுரை; சீமான் மீது டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூண்டுதல் பேரில் அவரது கட்சியினர் தம் மீதும், தம் குடும்பத்தினருக்கு எதிராகவும் சமூக வலை தளங்களில் அவதூறு கருத்துகள் பதிவிட்டு வந்தனர் என்பது திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் குற்றச்சாட்டு ஆகும்.
இது தொடர்பாக, சீமானுக்கு எதிராக வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இந்த வழக்கில் கோர்ட்டில் சீமான் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.
அதே சமயத்தில் சீமான் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டில் நாம் தமிழர் தரப்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அடுத்தக்கட்ட விசாரணை ஆக.4ம் தேதி நடைபெறும் என்று கூறி வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.