கணவரின் அராஜகத்தை கண்டுகொள்ளாத தி.மு.க. கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம்
கணவரின் அராஜகத்தை கண்டுகொள்ளாத தி.மு.க. கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம்
ADDED : ஜன 10, 2024 11:34 PM

சென்னை:சென்னை மாநகராட்சி, 51வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் நிரஞ்சனா; இவருடைய கணவர் ஜெகதீசன். தி.மு.க., உறுப்பினராகவும், உதயநிதி ரசிகர் மன்ற சென்னை வடக்கு மாவட்ட செயலராகவும் இருந்தார்.
இவர், 2022ல், ரோந்து போலீசாரை மிரட்டுவதுடன், 'நான் தான் கவுன்சிலர்' எனக் கூறி, அராஜகத்தில் ஈடுபட்டு வந்தார். போலீசாரை ஜெகதீசன் மிரட்டும் வீடியோ சமீபத்தில் இணையதளத்தில் பரவியது. அதையடுத்து, தி.மு.க.,வில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.
மீண்டும், 2022 டிசம்பரில், வண்ணாரப்பேட்டை நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு, ஜெகதீசன் மிரட்டினார்; பெண் வியாபாரி மோகனா என்பவரை, தகாத வார்த்தைகளால் திட்டினார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமினில் வெளியே வந்த பின்னும், அவரது ஆட்டம் தொடர்ந்தது. 'வண்ணாரப்பேட்டை துணிக் கடைகளில் பணம் வசூலிக்க வேண்டும்; அதற்காக ரசீது தயார் செய்து தர வேண்டும்' என, 51வது வார்டு உதவி பொறியாளர் மோதிராம் என்பவருக்கு தொந்தரவு கொடுத்து உள்ளார்.
அவர் மறுக்கவே, அவரை அடிக்க முயன்றார். ஜெகதீசனின் தொந்தரவால் பணி செய்ய முடியாமல், உதவி பொறியாளர் விடுப்பில் சென்றார்.
இதுபோன்ற புகார்கள், கட்சி தலைமைக்கு சென்றன. தன் கணவர் ஜெகதீசனின் அராஜக செயல்களை, கவுன்சிலர் நிரஞ்சனாவும் கண்டுகொள்ளவில்லை என்ற புகாரும், கட்சி தலைமைக்கு சென்றது.
இதையடுத்து, பெண் கவுன்சிலர் நிரஞ்சனா மீது, தி.மு.க., தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளது.
சென்னை, வடக்கு மாவட்டம், ராயபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த, 51வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் நிரஞ்சனா ஜெகதீசன், கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால், தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
- துரைமுருகன்,
தி.மு.க., பொதுச்செயலர்.

