தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன், மருமகள் ஆந்திராவில் கைது
தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன், மருமகள் ஆந்திராவில் கைது
ADDED : ஜன 26, 2024 01:57 AM

சென்னை:ஆந்திராவில் பதுங்கி இருந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன் ஆன்ட்ரோ மற்றும் மருமகள் மார்லினாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன், ஆன்ரோ, மருமகள் மார்லினா ஆகியோர், சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர்.
இவர்களது வீட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே, திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த, 18 வயது பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த பெண் வேலை பார்த்து வந்தார்.
இவரது உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்தனர். இது தொடர்பாக, சென்னை நீலாங்கரை மகளிர் போலீசார் இருவர் மீதும், எஸ்.சி., -- எஸ்.டி., வன்கொடுமை உட்பட, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தம்பதி தலைமறைவாகினர்.
இவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
எனினும், தம்பதி, 'இளம் பெண்ணை நாங்கள் கொடுமைப்படுத்தவில்லை. எங்கள் வீட்டில், டிச., 26ல் அவரது பிறந்தநாளை கொண்டாடினோம். அதில், ஆட்டம், பாட்டம் என, மகிழ்ச்சியாகவே இருந்தார்.
ஏற்காடு நட்சத்திர ஹோட்டலிலும் எங்களுடன் தங்கி மகிழ்ச்சியாக இருந்தார்' என, அடுத்தடுத்து, 'சிசிடிவி' பதிவுகளை வெளியிட்டனர்.
மேலும், இவர்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில்,'சென்னை மாவட்டத்தில் பதிவாகும் வன்கொடுமை தடை சட்ட வழக்குகளை விசாரிக்கும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைய உள்ளோம்.
அன்றைய தினமே எங்களது ஜாமின் மனுவை பரிசீலிக்க நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும்' என, கோரிக்கை விடப்பட்டு இருந்தது.
இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இருவரும் சரணடையும் நாளிலேயே ஜாமின் மனுவை பரிசீலித்து, இரு தரப்பினருக்கும் வாய்ப்பு அளித்து, சட்டத்திற்கு உட்பட்டு முடிவு எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இந்நிலையில், அடுத்தடுத்து இரண்டு, 'சிசிடிவி' பதிவுகளை வெளியிட்ட, தம்பதியின் மொபைல் போன் ஆந்திராவில் இருந்து பயன்படுத்தப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். அங்கு பதுங்கி இருந்த இருவரையும், நேற்று போலீசார் கைது செய்தனர்.

