தி.மு.க., குடும்பத்தில் 4 முதல்வர்கள் வெளுத்து வாங்கும் பழனிசாமி
தி.மு.க., குடும்பத்தில் 4 முதல்வர்கள் வெளுத்து வாங்கும் பழனிசாமி
ADDED : ஜன 27, 2024 02:32 AM
ஓமலுார்:சேலம் ஒன்றிய கவுன்சிலர் சாந்தி. இவரது கணவர் சங்கர்ராஜ். இவர் தி.மு.க.வில் சேலம் மத்திய மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார். இருவரும் அக்கட்சியில் இருந்து விலகினர்.
அத்துடன் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியோர் என 700 பேர் அ.தி.மு.க.வில் இணையும் விழா சேலம் புது ரோடு அருகே மல்லமூப்பம்பட்டியில் நேற்று நடந்தது.
அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில் 700 பேரும் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
தி.மு.க. குடும்பக் கட்சி. லாபம் நஷ்டம் பார்க்கும் கார்ப்பரேட் கம்பெனி. முன்பு கருணாநிதி இருந்தார். அடுத்து ஸ்டாலின் வந்தார். தற்போது உதயநிதியை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் உதயநிதியின் மகன் இன்பநிதியையும் அமர வைத்துவிட்டனர். தமிழகத்தில் மன்னராட்சியை கொண்டு வர முயற்சிக்கின்றனர். அப்போது தான் வாரிசுகளை ஆட்சியில் அமர வைக்க முடியும்.
ஜனநாயக நாட்டில் சர்வாதிகார ஆட்சியை தி.மு.க. நடத்துகிறது. மக்களை பற்றி கவலைப்படவில்லை. தி.மு.க. குடும்பமே ஆட்சி அதிகார மையமாகி வருகிறது. குடும்பத்தில் நான்கு முதல்வர்கள் உள்ளனர்.
அதனால் தான் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எது கிடைக்கிறதோ இல்லையோ போதைப் பொருட்கள் கிடைக்கின்றன. திறமையற்ற பொம்மை ஆட்சி நடக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. தற்போது 40 சதவீத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தொழில் விவசாயம் படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது. மக்கள் பிழைக்க முடியாத நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தி இருக்கிறது.
மினி கிளினிக் விலையில்லா சிமென்ட் மானியத்துடன் இருசக்கர வாகனம் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. செயல்படுத்தி வந்தது. அதை தி.மு.க. அரசு நிறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

