மதுரை மேற்கில் தி.மு.க.,வுக்கு அஸ்தமனம்தான்: செல்லுார் ராஜூ சாபம்
மதுரை மேற்கில் தி.மு.க.,வுக்கு அஸ்தமனம்தான்: செல்லுார் ராஜூ சாபம்
ADDED : ஜூன் 18, 2025 06:45 AM
மதுரை: ''மேற்கு திசையில் சூரியன் மறையவே செய்யும். அதனால் தி.மு.க.,வினர் வீடுவீடாக சென்று அடையாள அட்டைகளைப் பெற்று எதைக் கொடுத்தாலும் தி.மு.க., மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெறாது'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
செல்லுார் ராஜூ நிர்வாகிகளுடன் மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து, தி.மு.க.,வினர் குறித்து கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: மதுரை மேற்கு தொகுதி முழுவதும் தி.மு.க.,வினர் வீடுவீடாக அரசு அலுவலர்களைப் போலச் சென்று ரேஷன் கார்டு , ஆதார் அட்டை, அலைபேசி எண்ணைக் கேட்டு பெறுகின்றனர். அரசு நலத்திட்ட உதவிகளை கிடைக்கச் செய்வோம் என்று தெரிவிக்கின்றனர்.
தர மறுத்ததால், அரசு உதவி எதுவும் உங்களுக்கு கிடைக்காது எனத் தெரிவித்துள்ளனர். சாதாரண மக்களிடம் இதுபோல சென்று விபரங்களை கேட்பது தவறு. தனிநபர் உரிமையில் தலையிடுவதாக உள்ளதால் இது சட்டவிரோதமானது. அதனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.
வந்தவர்கள் அரசு ஊழியர்கள் என்பதற்கான ஆடியோ, வீடியோ இருந்தால் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியுள்ளார்.
மதுரை மேற்கு தொகுதிபோல, மற்ற தொகுதிகளிலும் செய்ய உள்ளனர். மேற்கு தொகுதியில் ஏற்கனவே டிபன் பாக்ஸ் கொடுத்துள்ளனர். நான் பெரிய 'ஹாட் பாக்ஸ் ' கொடுங்கள் என்று கூறியுள்ளேன். எது கொடுத்தாலும் மக்கள் வாங்குவர். அவர்களுக்கு ஓட்டு அளிக்க மாட்டார்கள். அரசு அலுவலர்கள் என்றுகூறி மக்களை ஏமாற்றுகின்றனர். தேர்தலுக்காக திருமங்கலம் பார்முலா, ஈரோடு பார்முலா போல இப்போது புதுபார்முலா கண்டு பிடித்துள்ளனர். அவர்கள் எல்லா தொகுதியிலும் இதைச் செய்யட்டும். மேற்கு திசையில் விடியல் வராது. மேற்கில் உதயசூரியன் உதிக்காது. மறையத்தான் செய்யும். அதனால் தி.மு.க., மதுரை மேற்கில் அஸ்தமனம் ஆகும்.
இவ்வாறு கூறினார்.

