தமிழகத்தில் மின்சார இழப்பு 10.73 சதவீதமாக குறைப்பு
தமிழகத்தில் மின்சார இழப்பு 10.73 சதவீதமாக குறைப்பு
ADDED : செப் 16, 2025 06:47 AM

சென்னை : 'தமிழகத்தில், 2017 - 18ல், 18.73 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக மின் இழப்பு, 2024 - 25ல், 10.73 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது' என, மின் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய மின் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில், டில்லியில் மாநில மின் துறை அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் மற்றும் மாநில மின் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதில், தமிழக அமைச்சர் சிவசங்கரன் பேசியுள்ளதாவது:
தமிழகத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, மின் தேவை மற்றும் மின் கொள்முதல் திட்டமிடப்படுகிறது. அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு, மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு, பகிர்மான கழகத்துக்கு, 2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு தேவைப்படுகிறது.
இதற்காக, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் வகையில், புதிய விரிவான கடன் மறுசீரமைப்பு திட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழகத்தில், 2017 - 18ல், 18.73 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணி க மின் இழப்பு, 2024 - 25ல், 10.73 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. 'பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் வட்டி விகிதம் , 1.50 சதவீதம் குறைக்கப்பட வேண்டும்.
சத்தீஸ்கர் ராய்கட் - கரூர் புகளூர் - கேரளா திருச்சூர் இடையிலான இரட்டை சுற்று மின் வழித்தடம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும்போது, ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு ஏற்படுகிறது. இதில், 1 சதவீத இழப்பை குறைத்தால், சராசரியாக 800 கோடி ரூபாய்க்கு செலவு மிச்சமாகும்.

