கட்டட நிறைவு சான்றின்றி மின் கட்டண விகிதத்தை மாற்றலாம்
கட்டட நிறைவு சான்றின்றி மின் கட்டண விகிதத்தை மாற்றலாம்
ADDED : ஜன 05, 2024 11:25 PM
சென்னை:'ஏற்கனவே மின் இணைப்பு பெற்ற கட்டடத்தில், மின் கட்டண விகிதத்தை மாற்றும் போது, கட்டட நிறைவு சான்று கேட்கக்கூடாது' என, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம்உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட விதிகள், 2019ன்படி, 12 மீட்டர் உயரமுள்ள மூன்று குடியிருப்புகள், 750 சதுர மீட்டர் பரப்பளவிற்கு உட்பட்ட வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டடங்களுக்கும், கட்டட நிறைவு சான்று இன்றி, புதிய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
மற்ற அனைத்து வகை கட்டடங்களுக்கும், மின் இணைப்பு வழங்க,கட்டட நிறைவு சான்று கட்டாயம். இந்த சான்றை, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்வழங்குகின்றன.
சிலர் தங்களின் வீடுகளை, அலுவலகம், கடை போன்றவற்றிற்கு வாடகைக்கு விடுகின்றனர். அதற்கேற்ப, மின் கட்டண விகிதத்தை மாற்றக்கோரி விண்ணப்பித்தால், கட்டட நிறைவு சான்று கேட்கப்படுகிறது.
இதையடுத்து, 'ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள நிரந்தர நுகர்வோர், மின் கட்டண விகிதத்தை மாற்றம் செய்யும் போது, கட்டட நிறைவு சான்று கேட்டு வற்புறுத்தக்கூடாது; புதிய மின் இணைப்புக்கு அந்த சான்றை கேட்கலாம்; இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும்' என, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறைஆணையம் உத்தரவிட்டுள்ளது.

