புதிய கதவணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி இழுபறி கொள்ளிடம் ஆற்றில் காவிரி நீர் வீணடிப்பு
புதிய கதவணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி இழுபறி கொள்ளிடம் ஆற்றில் காவிரி நீர் வீணடிப்பு
UPDATED : ஜூலை 02, 2025 03:49 AM
ADDED : ஜூலை 02, 2025 12:52 AM

சென்னை:புதிய கதவணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததால், கொள்ளிடம் ஆற்றில் காவிரி நீர் திறக்கப்பட்டு வீணடிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக, காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறு ஆகியவை உள்ளன. இதில் காவிரியின் வடிகாலாக கொள்ளிடம் ஆறு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முடிந்துள்ளன
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் அதிக நீர் திறக்கப்படும் போது, கொள்ளிடம் ஆற்றின் வழியாக பாதுகாப்பாக கடலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் கதவணைகளை கட்டி நீரை சேமிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதை ஏற்று, கொள்ளிடம் ஆற்றில், கடலுார் மாவட்டம் ஆதனுார், மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம் இடையே கதவணை கட்டப்படும் என, அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள், 2020ல் துவங்கப்பட்டன. கொரோனா காலத்தில் முடங்கிய பணிகள் தற்போது முடிந்துள்ளன.
கட்டுமான பணிக்கு, 516 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இதில், நிலம் எடுப்பு பணிக்கு இழப்பீடு வழங்குவதற்கு மட்டும், 52 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
இந்த கதவணை மூலமாக, 0.33 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும். நன்கு நிரப்புதல் மூலம், 1 டி.எம்.சி., நீரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அத்துடன், 27,944 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும்.
மேலும், 4,111 ஏக்கர், நிலத்தடி நீர் செறிவூட்டல் காரணமாக பாசன வசதி பெறும். இந்த கதவணையில் சேமிக்கப்படும் நீரை, வீராணம் ஏரிக்கு கொண்டு சென்று, சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
உபரிநீர் திறப்பு
கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், கதவணையில் நீர் சேமிக்கும் பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை. கர்நாடகா மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் மழையால், அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. அவற்றில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணையும் நிரம்பியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 50,000 கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு, 9,300 கன அடி, வெண்ணாற்றில், 9,300 கன அடி, கல்லணை கால்வாயில், 3,700 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. திருச்சி முக்கொம்பு கதவணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 30,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
புதிய அணையில் நீர் சேமிக்க முடியாததால், நடப்பாண்டும் அதிகளவில் நீர் வீணாகும் வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் கூறியதாவது:
சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், ஆதனுார் - குமாரமங்கலம் கதவணை கட்டும் பணிகள் துவங்கப்பட்டன. சுற்றுச்சூழல் துறை அனுமதி வேண்டி, நீர்வளத்துறை மூலமாக, மத்திய அரசின் பரிவேஷ் இணையதளத்தில், 2024 டிசம்பர் மாதம் விண்ணப்பம் செய்யப்பட்டது; இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி பெறுவதற்கான முயற்சிகளையும் நீர்வளத் துறையினர் எடுக்கவில்லை.
இனியாவது, நீதிமன்றத்தை அணுகி சுற்றுச்சூழல் குழு கூட்டத்தை கூட்ட வைத்து, விரைந்து அனுமதி பெற்று, காவிரி நீரை சேமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.