ADDED : ஜன 26, 2024 01:36 AM
சென்னை:தமிழகத்தில் இணை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும், 1.35 கோடி பேருக்கு, கண், கால், சிறுநீரக பரிசோதனை செய்ய, பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, 67.3 லட்சம் உயர் ரத்த அழுத்தம், 36.5 லட்சம் சர்க்கரை நோயாளிகள் உட்பட, 1.35 கோடி இணை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மாதந்தோறும் மருந்து, மாத்திரைகளும், 'டயாலிசிஸ், பிசியோதெரபி' உள்ளிட்ட சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஓராண்டுக்கு மேல் தொடர்ந்து சிகிச்சை பெறும் இணை நோயாளிகளுக்கு முதல் கட்டமாக, கண் பாதிப்பு, கால்களில் புண்கள், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது.
இவை நீண்ட கால பாதிப்பாக மாறும் என்பதால், முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க, பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
மக்களை தேடி மருத்துவம், திட்டம் துவங்கப்பட்டு, ஓராண்டுக்கு மேல் ஆகிறது. பொதுவாக இணை நோயாளிகளுக்கு, வேறு சில நோய் பாதிப்புகளும் ஏற்படும். அந்த வகையில், முதற்கட்டமாக ஏற்படக்கூடிய கண் பாதிப்பு, கால் புண்கள், சிறுநீரக பாதிப்புக்கு, 'ரேண்டம்' ஆக பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அதில் கண்டறியப்படும் பாதிப்புகளை தொடர்ந்து, இணை நோயாளிகள் அனைவருக்கும் கண், கால், சிறுநீரகம் மட்டுமின்றி, வேறு சில பரிசோதனைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

