ரூ.10,000த்தை மீட்கும் முயற்சியில் 1 லட்சம் ரூபாயை இழந்த விவசாயி
ரூ.10,000த்தை மீட்கும் முயற்சியில் 1 லட்சம் ரூபாயை இழந்த விவசாயி
ADDED : ஜூன் 03, 2025 07:13 AM

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே பி.முதுகானப்பள்ளியை சேர்ந்தவர் திம்மராயப்பா, 46. இவர், தன் நண்பரான பட்டவாரப்பள்ளி சீனிவாசன், 35, என்பவரிடம், 10,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
அதை மே 25ம் தேதி மாலை, 'போன் பே' என்னும் மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக பணம் அனுப்பியபோது, மாறுதலாக வேறொரு நபருக்கு பணம் சென்றது.
அந்த எண்ணுக்கு போன் செய்தபோது, அந்த நபர் போனை எடுக்கவில்லை. பாகலுார் போலீசுக்கு திம்மராயப்பா தகவல் தெரிவித்தார். அவர்கள், 1930 என்ற எண்ணில் புகார் செய்ய கூறியுள்ளனர்.
அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது, போலி, 'கஸ்டமர் கேர்' எண்ணுக்கு போன் சென்றது. எதிர் தரப்பில் பேசிய விஜயகுமார் என அறிமுகம் செய்து கொண்ட நபர், தன்னை போலீஸ் அதிகாரி எனக் கூறினார்.
திம்மராயப்பா எண்ணுக்கு அடையாள அட்டையை அனுப்பினார். திம்மராயப்பாவின் வங்கி கணக்கு, ஆதார் எண் போன்ற விபரங்களை பெற்றார். வங்கி விபரங்களை சரிபார்ப்பதாகக் கூறி, ஒரு எண்ணை கொடுத்து, அதற்கு 1 ரூபாய் அனுப்புமாறு கூறியுள்ளார்.
திம்மராயப்பாவும், 1 ரூபாயை, 'போன் பே'வில் அனுப்பினார். அப்போது, 'அடுத்த நாள் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்து விடும்' என, திம்மராயப்பாவிடம் அந்த நபர் கூறினார்.
ஆனால், பணம் வராத நிலையில், அடுத்தடுத்த நாட்களில் போன் செய்து, ஒரு மொபைல் போன் எண்ணை கொடுத்து, 4,999 ரூபாய் மற்றும் 95,000 ரூபாய் என, இருமுறை திம்மராயப்பாவிடம் இருந்து, 'கூகுள் பே' வாயிலாக, அந்த நபர் பணத்தை பெற்றார்.
அப்போது, 'நீங்கள் எங்களுக்கு அனுப்பிய, 1 லட்சம் ரூபாய், வேறொரு எண்ணுக்கு தவறுதலாக அனுப்பிய, 10,000 ரூபாய் சேர்த்து உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து விடும்' எனக்கூறி, அந்த நபர் போனை துண்டித்தார்.
ஆனால், பணம் வராததால் மீண்டும், 1930 என்ற எண்ணிற்கு திம்மராயப்பா போன் செய்தார். அப்போது தான், சரியான சைபர் கிரைம் எண்ணுக்கு போன் சென்றது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திம்மராயப்பா, கிருஷ்ணகிரி 'சைபர் கிரைம்' போலீசில் புகார் செய்தார்.