தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட யானைகள் இறப்பு 23 சதவீதம் வனத்துறை தணிக்கையில் தகவல்
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட யானைகள் இறப்பு 23 சதவீதம் வனத்துறை தணிக்கையில் தகவல்
ADDED : ஜூன் 11, 2025 02:01 AM

சென்னை:தமிழகத்தில், 5 வயதுக்கு உட்பட்ட யானைகள் இறப்பு, 23 சதவீதமாக உள்ளதாக, வனத்துறையின் தணிக்கையில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் வனப் பகுதிகளின் உயிர் சூழலில் பிரதான ஆதாரமாக இருப்பவை ஆசிய யானைகள் தான். ஒரு குறிப்பிட்ட வனப்பகுதியில் யானைகள் வசிக்கிறது என்றால், அங்கு பல்வேறு நிலை உயிரினங்களும் வசிப்பதற்கான சூழல் இருப்பதாக கருதப்படுகிறது.
இதனால் தான் வனப் பகுதிகளில் யானைகள் இருப்பதை உறுதி செய்ய, அதன் வாழ்விடங்கள், வழித்தடங்கள் பாதுகாப்பில், கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக, மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி வருகின்றன.
அதிர்ச்சி
தமிழகத்தில், 3,063 யானைகள் இருப்பதாக கடைசியாக, 2024ல் நடந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இருப்பினும், வெவ்வேறு காரணங்களால் யானைகள் இறப்பு தொடர்வது, வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதில், யானைகள் இறப்பை தணிக்கை செய்வதற்கான நடைமுறை, சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, 2010 முதல் நடந்த அனைத்து யானைகள் இறப்பும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வனப்பகுதிகளில் பல்வேறு காரணங்களால் யானைகள் இறக்கின்றன. இது தொடர்பாக, அறிவியல் பூர்வமாக தணிக்கை செய்ததில், சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
கடந்த, 2010 முதல் தற்போது வரை, 1,738 யானைகள் இறந்துள்ளன. இதில், 1,550 இறப்புகள் இயற்கையானதாகவும், 188 இறப்புகள், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களாலும் நடந்துள்ளன.
பரிந்துரை
யானைகள் இறப்பு குறித்த மொத்த எண்ணிக்கையில், 23 சதவீதம், 5 வயதுக்கு உட்பட்ட யானைகள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, 16 முதல், 25 வயது வரையிலான யானைகள் இறப்பு, 33 சதவீதம்.
பொதுவாக, இந்தியாவில் காணப்படும் ஆசிய யானைகளின் சராசரி ஆயுட்காலம், 50 ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. இதில், 16 முதல், 50 வயது வரையிலான காலத்தில் தான், உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் யானைகள் இறக்கும்.
ஆனால், தற்போது இளம் வயதில் யானைகள் இறப்பு அதிகரித்து வருவது தடுக்கப்பட வேண்டும். மேலும், பிரேத பரிசோதனைக்கான நிலையான வழிகாட்டுதல்களை மேம்படுத்த வேண்டும். வனப்பகுதிகளில் இளம் வயது யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.