தங்கம் விலையில் புதிய உச்சம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 உயர்வு
தங்கம் விலையில் புதிய உச்சம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 உயர்வு
ADDED : ஜூன் 14, 2025 06:29 AM
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 1,560 ரூபாய் அதிகரித்தது. இதையடுத்து, எப்போதும் இல்லாத வகையில் சவரன், 74,360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில், இந்த ஆண்டு ஏப்., 22ல், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,290 ரூபாய்க்கும், சவரன், 74,320 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. பின், தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் இருந்தாலும், புதிய உச்சத்தை எட்டவில்லை.
நேற்று முன்தினம் ஆபரண தங்கம் கிராம், 9,100 ரூபாய்க்கும், சவரன், 72,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 119 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 195 ரூபாய் உயர்ந்து, 9,295 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு அதிரடியாக, 1,560 ரூபாய் அதிகரித்து, 74,360 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 120 ரூபாய்க்கு விற்பனையானது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் போரால் ஏற்பட்டுள்ள பதற்றத்துடன், ஈரானின் அணு செறிவூட்டப்படும் நிலைகள் மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால், போர் பெருமளவில் விரிவடைய வாய்ப்புள்ளது. சமரசம் ஏற்படுவதற்கு வாய்ப்பு மிக குறைவு. இந்த போரில், பெரும்பாலான வல்லரசு நாடுகள் நடுநிலையை கடைப்பிடித்து வருகின்றன.
இதனால், போர் முடிவுக்கு வருவது சாத்தியம் இல்லாததால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் கச்சா எண்ணெய், தங்கம் விலை இன்னும் உயரும். இதன் தாக்கம் காரணமாக, நம் நாட்டிலும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.