'இன்ப்ளுயன்ஸா' காய்ச்சல் சரியானாலும் இருமல், தலைவலி, உடல் சோர்வு தொடரும் அரசு டாக்டர் எச்சரிக்கை
'இன்ப்ளுயன்ஸா' காய்ச்சல் சரியானாலும் இருமல், தலைவலி, உடல் சோர்வு தொடரும் அரசு டாக்டர் எச்சரிக்கை
ADDED : செப் 19, 2025 02:02 AM
சென்னை:தமிழகத்தில், 'இன்ப்ளுயன்ஸா வைரஸ்' காய்ச்சல் ஏற்பட்டவர்கள், வைரஸ் தொற்றுக்கு பிந்தைய இருமல், தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில், இன்ப்ளுயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகர பகுதிகளில், இப்பாதிப்பு அதிகளவு காணப்படுகிறது. சளி, இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு, உடல் சோர்வுடன் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது.
இது பெரும்பாலும், இன்ப்ளுயன்ஸா வகை பாதிப்பு என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வகை வைரஸ் காய்ச்சலுக்கு தொடர் மருத்துவ சிகிச்சை பெற்றாலும், தொற்றுக்கு பிந்தைய நோயாலும் மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
குறிப்பாக, வறட்டு இருமல், தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள், ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்து வருகின்றன.
இதுகுறித்து, அரசு பொது நல டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது:
இன்ப்ளுயன்ஸா பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் சரியானாலும், உடல் வலி, சோர்வு போன்றவை தொடர்ந்து இருக்கும். இதற்கு வைரஸ் பிந்தைய நோய் நிலை என்பர். வைரஸ் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு, நுரையீரல் அழற்சி ஏற்படும்.
அதனால், ஒரு வாரத்திற்கு மேலாக கூட வறட்டு இருமல் நீடிக்கும். தொடர்ந்து உடல் சோர்வு, உடல் வலி, காய்ச்சல் இல்லை என்றாலும், அதற்கான உணர்வு நிலை, சளி போன்றவை காணப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக, இதுபோன்ற பாதிப்புகள் இருக்கலாம்.
இவர்கள், ஒரு வாரத்திற்கு தினமும், 10 மணி நேரம் துாங்கி, ஓய்வெடுப்பது அவசியம். மேலும், புரத சத்து உணவுகள், கீரை, காய்கறிகள், சூப் போன்றவை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
வெளியூர் பயணங்கள் தவிர்ப்பது , ஓய்வெடுப்பது , வெந்நீர் அருந்துவது போன்றவற்றால், வைரஸ் பிந்தைய நோய் நிலையில் இருந்து விரைவில் மீண்டு வர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.