அரசின் கொள்கை முடிவு திட்டங்கள் மக்கள் நலனிற்காக இருக்க வேண்டும்; உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
அரசின் கொள்கை முடிவு திட்டங்கள் மக்கள் நலனிற்காக இருக்க வேண்டும்; உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 14, 2025 11:56 PM
மதுரை: அரசின் கொள்கை முடிவு அடிப்படையிலான திட்டங்கள் மக்கள் நலனிற்குரியதாக இருக்க வேண்டும். கரூர் மாவட்டம் குளித்தலை பஸ் ஸ்டாண்டில் நுழைவுவாயில் வளைவு அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளை அணுகலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
குளித்தலை கணேசன் தாக்கல் செய்த மனு:
குளித்தலை பேராளம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள பஸ் ஸ்டாண்டில் நுழைவுவாயில் வளைவு (ஆர்ச்) அமைக்கப்பட உள்ளது. தடுக்கக்கோரி கலெக்டர், குளித்தலை நகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
நுழைவுவாயில் வளைவு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் எளிதில் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றுவருவதில் வளைவு இடையூறு ஏற்படுத்தக்கூடும் என மனுதாரர் கருதினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுக வேண்டும். பொது நலனைப் பாதிக்கும்எந்தவொரு முடிவையும் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடத் தேவையில்லை.
அரசின் கொள்கை முடிவு அடிப்படையிலான திட்டங்கள் மக்கள் நலனிற்குரியதாக இருக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டிற்குள் மக்கள் எளிதில் சென்றுவருவதற்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது. நுழைவுவாயில் வளைவு அமைக்க எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுக மனுதாரருக்கு உரிமை உண்டு. வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

