செல்வாக்கு சிதைந்ததா.. பா.ம.க., எதிர்காலம் என்ன?
செல்வாக்கு சிதைந்ததா.. பா.ம.க., எதிர்காலம் என்ன?
ADDED : மே 30, 2025 05:07 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட கருத்துகள், கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பா.ம.க., இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி, கடந்த 2022ல் நடந்த பொதுக் குழுவில், கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், கட்சியின் அனைத்து முடிவுகளையும் ராமதாஸ் எடுப்பதால், அன்புமணி அதிருப்தியில் இருந்தார்.
கடந்த 2024 டிசம்பர் 28ல் புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில், இளைஞரணி தலைவராக மகள் வழி பேரன் முகுந்தனை நியமித்தார், ராமதாஸ். அதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவிக்க, அப்பா- - மகன் மோதல் முற்றியது. அதன் விளைவாக, கடந்த ஏப்ரல் 10ல், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கி, 'நானே தலைவர்' என ராமதாஸ் அறிவித்தார்.
கட்சியில், 90 சதவீத நிர்வாகிகள் அன்புமணி பக்கம் இருப்பதை அறிந்த ராமதாஸ், நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பேட்டி அளித்தார். அப்போது, அன்புமணி மீது கடுமை யான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
'புதுச்சேரி பொதுக்குழுவுக்குப் பின், ராமதாஸ் செயல்பாடுகளும், பொது வெளியில் அவரது பேச்சும், பா.ம.க.,வின் செல்வாக்கை சிதைப்பதாகவே உள்ளன. பா.ம.க.,வில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பலரும் நினைக்கின்றனர். இப்படியே போனால், வன்னியர் சமுதாயத்தின் ஆதரவை இழந்து, பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை வரும்' என்கின்றனர்.