முருங்கை வாங்கினால் உருளை வாங்குவோம் உ.பி., -- தமிழக வியாபாரிகள் பேச்சு
முருங்கை வாங்கினால் உருளை வாங்குவோம் உ.பி., -- தமிழக வியாபாரிகள் பேச்சு
ADDED : செப் 19, 2025 01:54 AM
சென்னை:'தமிழக முருங்கை காய்களை வாங்கினால், உத்தர பிரதேசத்தில் விளையும் உருளை கிழங்குகளை வாங்கிக் கொள்கிறோம்' என, இருதரப்பிலும் பேச்சு நடத்தப்பட்டு உள்ளது.
'அபெடா' எனப்படும், மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் வாயிலாக, சென்னையில், உ.பி., மற்றும் தமிழக உருளைக்கிழங்கு வியாபாரிகளுக்கான, வாங்குவோர், விற்போர் சந்திப்பு கூட்டம் நடத்தப் பட்டது. இதில், கோயம்பேடு உருளைக்கிழங்கு மொத்த வியாபாரி சவுந்தர்ராஜன் பேசியதாவது:
தமிழகத்திற்கு தேவையான உருளைக்கிழங்கு, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் அதிக அளவில் விளைகிறது. கர்நாடகா மாநிலம் ஹசன் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் உருளைக் கிழங்கு வருகிறது.
அவற்றை விட கிலோவிற்கு இரண்டு முதல் மூன்று ரூபாய் குறைவாக கொடுத்தால், உ.பி., மாநில உருளை கிழங்குகளை வாங்க, நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக வேளாண் விற்பனை பிரிவு துணை இயக்குநர் ஜீவராணி பேசியதாவது:
தமிழகத்தில் சைவம், அசைவம் என அனைத்து வகை உணவுகளிலும், உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. கட்டுப்படியாகும் விலையில், அதை விற்றால் வாங்குவதற்கு, தமிழக வியாபாரிகள் தயாராக உள்ளனர். தமிழகத்தில் முருங்கை காய்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.
அதற்கு, சில நேரங்களில் உரிய விலை கிடைப்பதில்லை. தமிழக முருங்கை காய்களை, உ.பி., வியாபாரிகள் அதிகளவில் வாங்கி விற்பனை செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு, செய்தால், நாங்களும், உ.பி., மாநில விவசாயிகளுக்கு உதவுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.